கடலூரில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம்: பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை
பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை கண்காணிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரி உத்தரவிட்டார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நேற்று கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமி தலைமை தாங்கி, தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
மாவட்ட கல்வி அலுவலர்கள் திருமுகம், செல்வக்குமார், செல்வராஜ், ஆஷா கிறிஸ்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகன் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமி பேசியதாவது:-
பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை பள்ளிக்கூடம் திறந்தவுடன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு உள்ளது என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகையை பள்ளிக்கூடங்களில் வைக்க வேண்டும்.
பள்ளிக்கூட வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். கழிவறைகளை சுத்தமாக வைக்க வேண்டும். டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க கழிவறை பின்புறத்தில் தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் பள்ளமான பகுதிகளை கண்டறிந்து, அவற்றை மணல் போட்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தவிர பள்ளிகளில் உள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்வதற்காக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்ய வருவார்கள். அவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மின் விபத்துகளை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாண்டு தேர்வு முடிவுகள் வந்த பிறகு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை ஆய்வு செய்து, பின்தங்கிய மாணவர்களின் விவரங்களை கணக்கெடுக்க வேண்டும். அவர்களை தேர்ச்சி பெற வைக்க மாணவர்களின் பெற்றோர்கள் விரும்பினால் அவர்களிடம் கையெழுத்து பெற்று சிறப்பு வகுப்புகள் எடுக்கலாம்.
வருகிற அரசு பொதுத்தேர்வில் கடலூர் மாவட்டம் சிறப்பான தேர்ச்சி விகிதத்தை பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணைய தளத்தில் முழுமையாக பதிய வேண்டும். காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறக்கும் வருகிற 3-ந்தேதி (புதன்கிழமை) அன்றே அனைத்து மாணவர்களுக்கும் 2-ம் பருவ பாட புத்தகங்களை வழங்கிட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமி கூறினார்.
கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 282 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story