ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 28 Sep 2018 9:30 PM GMT (Updated: 28 Sep 2018 5:15 PM GMT)

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணி வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

நெய்க்காரப்பட்டி, 

பழனியை அடுத்த பாப்பம்பட்டி பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அனைவருக்கும் பணி வழங்குவதில்லை, வங்கி மூலம் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் குளறுபடி உள்ளது என்பது உள்பட பல்வேறு புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

ஆனால் அந்த புகார்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாப்பம்பட்டி பகுதி மக்கள், பாப்பம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர். அவர்களுக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.

அதன்படி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமையில் அப்பகுதி கிராம மக்கள் நேற்று ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு ரூ.224-ஐ சம்பளமாக வழங்க வேண்டும். சம்பள தொகையை பாப்பம்பட்டி தேசியமயமாக்கப்பட்ட வங்கி மூலமே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்களுடன் ஊராட்சி அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story