சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கவில்லை என்றால்தான் புனிதம் கெட்டுவிடும் - மதுரை ஆதீனம் பேட்டி
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கவில்லை என்றால்தான் புனிதம் கெட்டுவிடும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்தார்.
மதுரை,
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பெண்கள் அனைவரும் சபரிமலை சன்னிதானத்திற்கு சென்று வழிபடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது. இது வரவேற்கத்தக்கது. அனைத்து பெண்களுக்கும் இது பெருமை அளிக்கக்கூடிய தீர்ப்பாக உள்ளது. ஆண்களும், பெண்களும் சமமானவர்கள். இருவரும் சம உரிமை படைத்தவர்கள். பெண்களுக்கு என்று தனி சட்டம் இருக்கக்கூடாது என்பதை இந்த தீர்ப்பு நமக்கு தெளிவுபடுத்துகிறது.
பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றால் புனிதம் கெட்டுவிடும் என்று சொல்வது நியாயமல்ல என்கிற வகையிலே சுப்ரீம் கோர்ட்டு நல்ல தீர்ப்பை வழங்கி இருக்கிறது. பெண்களை சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்கவில்லை என்றால்தான் புனிதத்தன்மை கெட்டு விடும். சில விஷயங்களை சட்ட வரையறைக்கு உட்பட்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். சபரிமலைக்கு செல்ல வேண்டும் என எல்லா வயதுடைய பெண்களும் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் எந்த கோவிலிலும் பெண்கள் நுழையக்கூடாது என்று கூறப்படுவது இல்லை. சபரிமலை கோவிலில் பெண்கள் தரிசனம் செய்யலாம் என்று கூறியதால்தான் பெரு வெள்ளம் வந்து சேதம் ஏற்பட்டதாக கூறுவது தவறு. அது இயற்கையாக நடந்தது. இதற்கு பெண்கள் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.