755 கிராமங்களுக்கு விரைவில் கூடுதல் குடிநீர் வினியோகம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்
755 கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து விரைவில் கூடுதல் தண்ணீர் வினியோகிக்கப்பட உள்ளது.
விருதுநகர்,
மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் நடந்து வரும் பணிகள் குறித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியிருப்பதாவது:–
முக்கூடல் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாக ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய ஒன்றியத்திலுள்ள கிராமப்பகுதிகளுக்கும், சேத்தூர், செட்டியார்பட்டி, சுந்தரபாண்டியபுரம், வ.புதுப்பட்டி, வத்திராயிருப்பு மற்றும் கொடிக்குளம் ஆகிய பேரூராட்சிகளுக்கும் தாமிரபரணி குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ராஜபாளையம், சிவகாசி மற்றும் திருத்தங்கல் ஆகிய நகராட்சிப் பகுதி மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டினை முற்றிலும் போக்கும் வகையில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர்திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் கொண்டாநகரம் அருகே தாமிரபரணி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு, ராஜபாளையம் நகராட்சிக்கு சுமார் ரூ.198 கோடி மதிப்பீட்டிலும், சிவகாசி நகராட்சிக்கு ரூ.117.34 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் திருத்தங்கல் நகராட்சிக்கு ரூ.89 கோடி மதிப்பீட்டிலும் குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் நகராட்சிகளிலும் ரூ.450 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த அதற்கான ஆய்வுப்பணிகள் நிறைவடைந்து, பணிகள் தொடங்க உள்ளது.
அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளுக்கு திருப்புவனம் வைகைஆற்றிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து வருகிற குடிநீர் முழுமையாகவும், தங்குதடையின்றியும் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் குடிநீர் குழாய் புதுப்பிக்கும் பணிகள் விரைவில் நடைபெறவுள்ளது.
சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் விருதுநகர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 755 கிராமங்களுக்கு கூடுதல் குடிநீர் கிடைக்கும் வகையில் கூட்டு குடிநீர் (சீவலப்பேரி தலைமையிடம்) திட்டம் ரூ.234 கோடி மதிப்பீட்டில் நிறைவுபெற்று, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்படவுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.