மின்னல் தாக்கி பெண் பலி : 7 ஆடுகள் செத்தன


மின்னல் தாக்கி பெண் பலி : 7 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 29 Sept 2018 3:15 AM IST (Updated: 29 Sept 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 7 ஆடுகள் உடல் கருகி செத்தன.

விழுப்புரம், 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மனங்கூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு மனைவி பத்மாவதி (வயது 48). இவரும் அதே ஊரை சேர்ந்த வெங்கடாசலம் மனைவி காந்தாமதியும்(55) நேற்று மதியம் 2 மணியளவில் அருகில் உள்ள விளை நிலத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பத்மாவதி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். காந்தாமதி படுகாயமடைந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் உள்ள வயல்களில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் விரைந்து வந்து படுகாயமடைந்த காந்தாமதியை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான பத்மாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் கொணலவாடி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் அதே பகுதியை சேர்ந்த தர்மராஜ், வேலாயுதம் ஆகியோருக்கு சொந்தமான 7 ஆடுகள் உடல் கருகி செத்தன. இதையடுத்து உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். 

Next Story