குறை தீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்


குறை தீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 29 Sept 2018 4:45 AM IST (Updated: 29 Sept 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயிர்இழப்பீடு வழங்கக்கோரி அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு கோஷமிட்டதோடு, திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்,

மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. வேளாண் துறை இணை இயக்குனர் சொர்ணமகாலிங்கம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு கலெக்டர் வருவதற்கு தாமதமானதால் அதனை கண்டித்தும், 2016-17-ம் ஆண்டில் விடுபட்ட விவசாயிகளுக்கும், 2017-18-ம் ஆண்டில் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என்று கூறியும், அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் கோஷமிட்டனர். மேலும், கூட்ட மேடை முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதன்பின்னர் கூட்டத்திற்கு வந்த கலெக்டர் வீரராகவராவ், பயிர்காப்பீடு தொடர்பாக இன்சூரன்சு நிறுவன அதிகாரி லட்சுமணன் மூலம் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டு தொகை பெற்றுத்தரப்படும் என்றும் உறுதி அளித்தார். அப்போதும் சலசலப்பு ஏற்பட்டது. அதிகாரிகளை கண்டித்த விவசாயிகள் கலெக்டர் அமர்ந்து இருந்த மேடை நோக்கி சென்று முற்றுகை யிட்டனர். அதிகாரிகளுடன் காரசாரமாக விவாதித்தனர். அனைவரையும் கலெக்டர் அமைதிப்படுத்தினார்.

இதன்பின்னர் நடைபெற்ற விவாதங்களின்போது கலெக்டர் விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:- பிரதம மந்திரியின் பயிர்காப்பீடு திட்டத்தின்கீழ் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 625 விவசாயிகளுக்கு 1 லட்சத்து 13 ஆயிரத்து 920 எக்டர் பரப்பில் நெல் மற்றும் இதர பயிர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் இதுவரை காப்பீடு செய்யப்பட்ட 393 கிராமங்களில் 382 கிராம விவசாயிகளுக்கு ரூ.561 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 11 கிராமங்களுக்கு இழப்பீடு வழங்க இன்சூரன்சு நிறுவனத்திற்கு விரிவான அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் இறுதிக்குள் விடுபட்ட தொகை உறுதியாக வழங்கப்படும். இதுதவிர, 2017-18-ம் ஆண்டிற்கு மாவட்டத்தில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 988 விவசாயிகள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 673 எக்டர் பரப்பில் பயிர்காப்பீடு செய்துள்ளனர். இதற்காக விவசாயிகள் ரூ.10 கோடியே 20 லட்சத்து 83ஆயிரத்து 625 தொகை காப்பீடு செலுத்தி உள்ளனர்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களின் சில ஆவணங்கள் தெளிவாக இல்லாததால் மீண்டும் வழங்க கேட்டுள்ளனர். இதனால் காலதாமதம் என்று தெரிவித்துள்ளனர். ஆவணங்கள் சரியாக உள்ளவர்களுக்கு முதல்கட்டமாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் கவலைப்பட வேண்டாம். இவ்வாறு கூறினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தென்னவன், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகை முழுமையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். 

Next Story