விழுப்புரத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசியதும், அதற்கு கலெக்டர் அளித்த பதில்கள் விவரம் வருமாறு:-
கலிவரதன்:- திண்டிவனம் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்திற்கு விவசாயிகள் பயிற்சிக்கு சென்றால் விஞ்ஞானிகளை வைத்து பயிற்சி கொடுக்காமல் அவர்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளை கொண்டு அரைகுறையாக பயிற்சி அளிக்கின்றனர். விவசாயிகளை மதிப்பதும் கிடையாது.
கலெக்டர்:- விவசாயிகளுக்காகத்தான் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையம் உள்ளது. இதுபோன்ற புகார்கள் இனி வரும்காலங்களில் வரக்கூடாது. அவ்வாறு புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமமூர்த்தி:- தமிழகத்திலேயே நமது மாவட்டத்தில் கரும்பு உற்பத்தியும், இறவை பாசனமும் அதிகம். ஆனால் கரும்புக்குரிய அரசு அறிவித்த விலையை தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்காததால் கரும்பு பயிரிட விவசாயிகளுக்கு நாட்டம் இல்லை. இதே நிலைமை நீடிக்கும் என்றால் சர்க்கரை ஆலைகள் இயங்காமல் போகும் நிலை ஏற்படலாம். அதுபோல் கரும்புக்குரிய நிலுவைத்தொகையையும் வழங்காமல் தனியார் சர்க்கரை ஆலைகள் கோடிக்கணக்கில் பாக்கி வைத்துள்ளது. எனவே கரும்புக்குரிய அரசு அறிவித்த விலை மற்றும் நிலுவைத்தொகையை விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதுபோல் விழுப்புரம் மாவட்டம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இதே கோரிக்கையை பெரும்பாலான விவசாயிகளும் வலியுறுத்தினர்.
கலெக்டர்: கரும்புக்கு அரசு அறிவித்த விலை மற்றும் நிலுவைத்தொகையை தனியார் சர்க்கரை ஆலைகள் விரைந்து வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காதபட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மணி:- சேதமடைந்துள்ள திண்டிவனம் கிடங்கல் ஏரியின் மதகை உடனே சீரமைக்க வேண்டும். கடவம்பாக்கம் பகுதியில் மணல் கொள்ளையை உடனடியாக தடுக்க வேண்டும். தாட்கோ மூலம் கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வங்கிகள் தாமதமின்றி விரைந்து கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலம் தொடங்க உள்ளதால் நீர் வரத்து வாய்க்கால்களை உடனே தூர்வார வேண்டும்.
கலெக்டர்: ஏரியின் மதகு விரைவில் சீரமைக்கப்படும். ஏற்கனவே வங்கி அதிகாரிகளுக்கு கூட்டம் நடத்தி தாட்கோ கடனை விரைந்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏரி மற்றும் வரத்து வாய்க்கால் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முத்துமல்லா:- சிறுவந்தாடு கால்நடை மருத்துவமனையில் சுற்றுச்சுவர் வசதி அமைக்க வேண்டும். ராம்பாக்கத்தில் இருந்து சொர்ணாவூர் செல்லும் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும்.
கலெக்டர்: அரசிடம் நிதி பெற்று சுற்றுச்சுவர் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். இணைப்பு சாலையை ஓரிரு மாதத்தில் சீரமைக்க ஏற்பாடு செய்யப்படும்.
சீத்தாராமன்:- பில்லூர், ஆழாங்கால் பகுதியில் ஓடும் மலட்டாறு, நரியாறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்.
கலெக்டர்: அதிகாரிகளை நேரில் அனுப்பி ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
ராஜகோபால்:- திருக்கோவிலூர் நகரில் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில் பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்ய வேண்டும். வடகிழக்கு பருவமழையையொட்டி செம்மரம், ஜவ்வாது போன்ற உயர்ரக மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
கலெக்டர்: உயர்கோபுர மின்விளக்கு பழுதை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். உயர்ரக மரக்கன்றுகளை இலவசமாக வழங்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ஏற்பாடு செய்யப்படும்.
ஜெயராமன்:- கணையார் பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்ற வேண்டும். அதோடு நீர்வரத்து வாய்க்காலையும் தூர்வார வேண்டும்.
கலெக்டர்: ஏரி ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடந்து வருகிறது. முழுவதுமாக ஆக்கிரமிப்பு அகற்றப்படும்.
கலியமூர்த்தி:- காட்டுப்பன்றிகளால் நாசமான பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். கிளியனூர் அம்மன்குட்டை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கலெக்டர்: உரிய இழப்பீட்டு தொகை பெற்றுத்தரப்படும். அம்மன்குட்டை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, வேளாண் இணை இயக்குனர் சண்முகம், வேளாண் அலுவலர் சுரேஷ், துணை இயக்குனர் செல்வராஜ், முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் காளிமுத்து, சிவராஜ், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குனர் மலர்விழி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story