அம்பராம்பாளையம் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்


அம்பராம்பாளையம் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்
x
தினத்தந்தி 29 Sept 2018 4:15 AM IST (Updated: 29 Sept 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

நெகமம்,

தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் சாலைகள் மேம்படுத்தும் பணி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நெகமம் அருகில் உள்ள காளியப்பம்பாளையம் முதல் ரங்கம்புதூர் வரை ரூ. 3 கோடி செலவில் தார் சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணிக்கான பூமி பூஜையை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

நெகமம் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள சாலைகளை சிமென்ட் சாலையாகவும், தார்சாலையாகவும் மாற்றித்தரப்படும். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பொள்ளாச்சி தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் சீராக வழங்க ரூ.85 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மாத இறுதியில் அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது. அதைத் தொடர்ந்து 6 மாத காலத்திற்குள் அந்தப்பணிகள் விரைந்து முடிக்கப்படும். தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை வந்து கொண்டு இருக்கும் குடிநீர், திட்டப்பணிகள் முடிந்த பிறகு நாள்தோறும் அனைத்து கிராமத்திற்கும் கிடைத்து விடும். குடிநீர் பிரச்சினை இருக்காது.

இதற்காக தேவையான இடங்களில் மேல்நிலை தொட்டிகள் அமைத்து, பைப்லைன் அமைத்து குடிநீர் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நெகமத்திற்கு என்று தனிக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக அம்பராம்பாளையம் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, வடுகபாளையத்திற்கு கொண்டு வரப்பட்டு, தினந்தோறும் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் நெகமம் பகுதி மக்கள் தினந்தோறும் அம்பராம்பாளையம் ஆற்று குடிநீரை மட்டுமே உபயோகித்து வருகின்றனர். இதுபோன்று அனைத்து கிராமங்களுக்கும் அம்பராம்பாளையம் குடிநீர் தங்குதடையின்றி விரைவில் கிடைத்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார். விழாவில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராதாமணி, ராமகிருஷ்ணன், மாணவரணி ஒன்றிய செயலாளர் நாகராஜன், சிவக்குமார் செந்தில் பிரபு உள்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நிகழ்ச்சிக்குநெகமம் பேரூராட்சி முன்னாள் தலைவருமான கே.வி.பி.சோமசுந்தரம் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமோதரன், பேரூராட்சி செயலாளர் மோகன், பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் பார்த்தசாரதி, செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் வரவேற்புரை ஆற்றினார்.


Next Story