காதலியை திருமணம் செய்ய முடியாத விரக்தியில் வாலிபர் தற்கொலை
தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி,
சென்னை கோயம்பேடு நெற்குன்றம், சக்தி நகர், 14-வது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாந்த்(வயது 22). டிரைவர். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த கிருஷ்ணபிரசாந்த், தனது அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார்.
நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவருடைய அக்கா பிரியா(23), அறை கதவை திறந்து பார்த்தார். அப்போது கிருஷ்ணபிரசாந்த், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அலறினார்.
இது குறித்து தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போலீசார், கிருஷ்ணபிரசாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
ஜாதகம் பொருந்தவில்லை
அதில், கிருஷ்ணபிரசாந்த் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் அறிந்த அவரது பெற்றோர், அந்த பெண்ணையே கிருஷ்ணபிரசாந்த்துக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர்.
இதற்காக இருவருக்கும் பொருத்தம் உள்ளதா? என ஜோதிடரிடம் இருவரின் ஜாதகத்தையும் பார்த்தனர். அதில் அந்த பெண்ணின் ஜாதகம் பொருந்தவில்லை என்று ஜோதிடர் கூறியதாக தெரிகிறது. இதனால் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.
இதில் விரக்தி அடைந்த கிருஷ்ணபிரசாந்த், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story