பணப்பலன்களை வழங்கக்கோரி ஊட்டியில் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்


பணப்பலன்களை வழங்கக்கோரி ஊட்டியில் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 29 Sept 2018 4:30 AM IST (Updated: 29 Sept 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

பணப்பலன்களை வழங்கக்கோரி ஊட்டியில் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எல்லநள்ளி கெக்கட்டி பகுதியில் பிரபல தனியார் நிறுவனத்தின் மூலம் காளான் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலையில் 700–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். நல்ல நிலையில் இயங்கிய தொழிற்சாலை வேறு ஒரு தொழிற்சாலையிடம் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காளான் வரத்து அதிகரித்ததாலும், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் உயர்த்தி கேட்கப்பட்டதாலும் தொழிற்சாலையை படிப்படியாக மூட நிர்வாகம் முடிவு எடுத்தது.

அப்போது தொழிலாளர்கள் பலர் விருப்பு ஓய்வு பெற்று சென்று விட்டனர். 372 தொழிலாளர்களுக்கு முழு பணப்பலன்களை வழங்க வேண்டும் என்று தொழிற்சாலை நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கிடையே தனிநபர் ஒருவர் தொழிற்சாலையை எடுத்து நடத்தினார். அதன் பின்னர் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான பணப்பலன்கள் வழங்க இயலாத காரணத்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சாலை மூடப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் பல பேராட்டங்களை நடத்தினர்.

இதற்கிடையே தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் சார்பில் பணப்பலன்களை வழங்கக்கோரி ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு சமூக அமைப்பை சேர்ந்த மோகன்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் செபாஸ்டின், உதவி தலைவர்கள் பழனி, குமார், வினோத்குமார் மற்றும் பெண்கள் பலர் கலந்துகொண்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கவுரவ கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நான் எனது கணவர் சங்கர் பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறேன். போராட்டத்தில் அதிகமான பெண்கள் கலந்துகொண்டு உள்ளனர். நான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவு அளிக்கிறேன். தனியார் தொழிற்சாலையின் அறக்கட்டளையில் இருப்பு வைக்கப்பட்டு உள்ள தொகை தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டியது ஆகும். வேறு யாருக்கும் அந்த தொகையை பயன்படுத்த முடியாது. எனவே, தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமாக உள்ளதால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ஜாதி ஆணவ படுகொலைக்கு என்று தனிச்சட்டம் அவசியம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என்றார்.


Next Story