பிளஸ்–1 மாணவியை கடத்தி திருமணம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


பிளஸ்–1 மாணவியை கடத்தி திருமணம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Sept 2018 4:00 AM IST (Updated: 29 Sept 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்–1 மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த வாலிபரின் தாயும் போலீசாரிடம் சிக்கினார்.

ஈரோடு,

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் ஈரோட்டில் தங்கி இருந்து கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது இவருக்கும், ஈரோட்டை சேர்ந்த பிளஸ்–1 படிக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த மாணவியின் பெற்றோர் அவரை கண்டித்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 21–ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது மகளை, கட்டிட தொழிலாளியான 19 வயது வாலிபர் கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியையும், 19 வயது வாலிபரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ராயர்பாளையத்தில் மாணவியும், அந்த வாலிபரும் தங்கி இருப்பதாக மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் மாணவியை அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர், அந்த மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்ததுடன், அவருடன் ராயர்பாளையத்தில் குடும்பம் நடத்தியதும்’ தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாணவியை கடத்தி திருமணம் செய்ய உடந்தையாக இருந்ததாக வாலிபரின் தாயையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story