சென்னை கோட்டை முன்பு அக்டோபர் 25-ந் தேதி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மறியல் போராட்டம்


சென்னை கோட்டை முன்பு அக்டோபர் 25-ந் தேதி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2018 3:45 AM IST (Updated: 29 Sept 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கோட்டை முன்பு அக்டோபர் 25-ந் தேதி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் முகமதுஅலி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற மாநில பொதுச்செயலாளர் முகமதுஅலி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் சுமார் 5 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் குடும்பங்கள், தினமும் சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை, சுமார் 10 ஆயிரம் ஆரம்ப பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கி வருகின்றனர். இது தவிர சுமார் 10 லட்சம் குடும்பங்கள் தனியார் பால் கொள்முதல் நிறுவனங்களுக்கு தினமும் சுமார் 50 லட்சம் லிட்டர் பாலை வழங்கி வருகின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டு கடைசியாக பாலுக்கு கொள்முதல் விலையை பசும்பால் ஒரு லிட்டருக்கு ரூ. 28, எருமை பால் ஒரு லிட்டருக்கு ரூ. 35 என மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். கால்நடை தீவனங்களின் விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே, மேலும் காலம் கடத்தாமல் பசும்பாலுக்கு ரூ. 35, எருமைப்பாலுக்கு ரூ. 45 என கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்திட வேண்டும்.

பாலை கொள்முதல் செய்கிற ஆரம்ப சங்கங்களிலேயே பாலின் தரத்தையும், அளவையும் குறித்து கொடுத்திட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அளித்த தீர்ப்பை உடனடியாக அமல்படுத்திட வேண்டும். ஆவின் நிர்வாகம் தொடர்ந்து பாலின் தரம், அளவு ஆகியவற்றை குறைத்து மோசடி செய்ய அனுமதிக்கக்கூடாது. சத்துணவு திட்டத்தில் ஆவின் பாலையும் சேர்த்து வழங்கிட வேண்டும்.

இந்தியாவில் பால் உற்பத்தியில் குஜராத் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் இருந்தது. ஆனால் தற்போது தமிழகம் 8-வது இடத்திற்கு சென்றுவிட்டது. இதற்கு காரணமான ஆவின் நிர்வாகத்திற்கு கண்டனத்தை தெரிவித்துகொள்கிறோம். ஆவின் நிர்வாகம் தினமும் 50 லட்சம் லிட்டர் அளவிற்கு பாலை கொள்முதல் செய்து, விற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆரம்ப சங்க பணியாளர்களுக்கு வழங்கப்படுகிற சம்பளத்தில் 50 சதவீதத்தை ஆவின் நிர்வாகம் வழங்கிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற அக்டோபர் மாதம் 25-ந் தேதி சென்னை கோட்டை முன்பு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்காக தான் மாவட்டம் தோறும் சென்று, பால் உற்பத்தியாளர்களிடம் விளக்கி ஆதரவு திரட்ட தற்போது இந்த கூட்டம் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, சங்கத்தின் மாநில துணை செயலாளரும், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவருமான ராமசாமி, மாவட்ட செயலாளர் அண்ணாமலை, மாவட்ட குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், மனோரகன், குணசேகரன், சின்னசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story