அமராவதி ஆற்றில் சாயக்கழிவு கொட்டப்பட்டதாக குற்றச்சாட்டு விவசாயிகளுடன் சென்று வருவாய் அதிகாரி ஆய்வு


அமராவதி ஆற்றில் சாயக்கழிவு கொட்டப்பட்டதாக குற்றச்சாட்டு விவசாயிகளுடன் சென்று வருவாய் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 29 Sept 2018 4:37 AM IST (Updated: 29 Sept 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அமராவதி ஆற்றில் சாயக்கழிவு கொட்டப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதை தொடர்ந்து அவர்களுடன் சென்று அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார்.

கரூர்,

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷிடம், கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க செயலாளர் ராமலிங்கம் உள்பட விவசாயிகள் மனு கொடுத்தனர். அதில், கரூர் உழவர் சந்தை எதிரேயுள்ள பிரம்மதீர்த்த குளத்தையொட்டிய அமராவதி ஆற்றில் சாயப்பட்டறையில் இருந்து வெளியேற்றப்பட்ட திடக்கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பதாகவும், இதனால் நீர்மாசுபாடு ஏற்படுவதற்கு முன்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் குறைதீர் கூட்டம் முடிந்ததும், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமையில் மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் உள்பட அதிகாரிகள் காரில் புறப்பட்டு சென்று சாயக்கழிவுகள் கொட்டப்பட்டதாக கூறப்பட்ட அமராவதி ஆற்று பகுதிக்கு வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த கழிவுகள் பொக்லைன் மூலம் பரப்பி விடப்பட்டு மண்ணோடு மண்ணாக கலந்திருந்தது தெரிய வந்தது. விவசாயிகள் சங்கத்தினர் அந்த மண்ணை கையால் தோண்டி எடுத்து அதில் திட நிலையிலிருந்த சாயக்கழிவுகளை அதிகாரிகளிடம் காண்பித்து முறையிட்டனர். அப்போது அவர்கள், விவசாயத்தின் நலன் கருதி தான் தற்போது அமராவதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆற்றில் கொட்டப்பட்ட சாயக்கழிவினால் நீர்மாசுபடுவதோடு விவசாயமும் பாதிக்கும். மேலும் இந்த நீரை பயன்படுத்துவதன் மூலம் நோய் தாக்கமும் ஏற்படலாம் என்று தெரிவித்தனர்.

மேலும் அமராவதி ஆற்றங்கரையின் ஓரமாக குவித்து வைக்கப்பட்டு இருந்த மண்ணில், மரப்பட்டறையில் இருந்து கொண்டுவரப்பட்ட துகள்கள் தூவிவிடப்பட்டிருந்தன. அதிலும் கழிவுகள் உள்ளே இருந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். சமீபத்தில் தான் அமராவதி ஆற்றை தூர்வார அனுமதியின்றி பொக்லைன் எந்திரத்தை ஆற்றுக்குள் இறக்கியதற்காக நாம் தமிழர் கட்சியினர் சிலர் கைது செய்யப்பட்டனர். அப்படி இருக்கையில் பிரம்மதீர்த்த குளம் அருகே பொக்லைன் எந்திரத்தை அமராவதி ஆற்றுக்குள் யாருடைய அனுமதியுடன் இறக்கினார்கள்? என்பது குறித்து விசாரித்து சாயக்கழிவினை கொட்டியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இல்லையெனில் வருகிற அக்டோபர் 2-ந் தேதி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துவோம் என அதிகாரிகள் முன்னிலையில் விவசாய சங்கத்தினர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சாயக்கழிவு கொட்டப்பட்டதாக கூறப்படும் இடங்களிலிருந்து மாதிரிகளை சேகரித்து மூட்டைகளில் கட்டி அதிகாரிகள் எடுத்து சென்றனர். மேலும் அந்த இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சாயக்கழிவு விவகாரத்தில் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story