தமிழகத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
தமிழகத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கோத்தகிரி,
பா.ஜ.க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய கப்பல்துறை மற்றும் நிதிதுறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கோத்தகிரி வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது.
இந்திய ராணுவம் 2016 –ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே நாளில் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தான் ஆதரவுடன் இயங்கிய பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களை துல்லிய தாக்குதல் நடத்தி அழித்தது. இந்த நிகழ்வு சர்வதேச அளவில் இந்தியாவை தலைநிமிர செய்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு இந்த நேரத்தில் வணக்கம் செலுத்த நாம் கடமைப்பட்டு உள்ளோம்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளை கைப்பற்றக்கூடிய கூட்டணியாக பா.ஜ.க. கூட்டணி இருக்கும். மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்கு எடுத்து கூறி பிரசாரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வந்துள்ளேன்.
மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து பேசி, பச்சை தேயிலை பிரச்சினை உட்பட மாவட்ட மக்களின் பிரச்சினைகளை மத்திய அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல உள்ளேன். தமிழக மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. குற்றம் செய்த வர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழகத்தை ஒட்டிய கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா எல்லையோர மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பயங்கரவாதிகள் ஆயுத தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அரசு தரப்பு கூறுகிறது. பயங்கரவாதிகளில் களத்தில் இறங்கி தாக்குதல் நடத்துபவர்கள், அவர்களுக்கு பின்புலத்தில் பொருளாதார உதவி செய்பவர்கள், ஆதரவாக பேசுபவர்கள் என 3 பிரிவினர் உள்ளனர்.
இதில் பயங்கரவாதிகள், அவர்களுக்கு பண உதவி செய்பவர் யார் என தெரியாது. ஆனால் போராளிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களை அடையாளம் காண முடியும் என்பதால் அரசு அவர்களை தொடர்ந்து கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் சூழ்நிலை மிகவும் மோசமாகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து பா.ஜ.க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அவர் பங்கேற்றார். பின்னர் அவர், வங்கி மேலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம், தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் கள் மற்றும் தேயிலை விவசாயிகள் பங்கேற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார். முன்னதாக கோத்தகிரி வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை, நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.