விருதுநகரில்ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலை உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
விருதுநகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலை உள்ளதால் சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகரை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் விருதுநகரில் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஒரு மனு கொடுத்து இருந்தார். அதில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக மாரியம்மன்கோவில், ரத வீதிகள், எம்.ஜி.ஆர்.சிலை ரோடு, புல்லலக்கோட்டை ரோடு, ராமமூர்த்தி ரோடு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு உள்ளதாகவும் அவற்றை அகற்ற உத்தரவிடக்கோரி இருந்தார்.
கடந்த மாதம் மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதிஷ்குமார் அமர்வு விசாரித்த போது, இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடந்து வருவதாக தெரிவித்ததால் அது குறித்து 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
மேலும் விருதுநகர் டாக்டர் ஜகதாம்பாள் உள்ளிட்ட பலர் நடைபாதைகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்த நிலையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தருமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் விருதுநகரின் சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி நடவடிக்கை எடுத்த போதிலும் அவை முறையாக அகற்றப்படவில்லை.
நெடுஞ்சாலைத்துறையினரும், நகராட்சி நிர்வாகத்தினரும் ஆவணங்களின்படி ஆக்கிரமிப்புகள் எவை என கண்டறிந்து அதன்படி நடவடிக்கை எடுக்காமல் கட்டிடங்களுக்கு முன்பு உள்ள பந்தல்களை மட்டும் அகற்றுவது என்பது உரிய நடவடிக்கை ஆகாது என மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. எனினும் இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்ற முறையான நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் விருதுநகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் முறையான நடவடிக்கை எடுக்க உரிய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.