மாவட்டத்தில் வருகிற 4–ந்தேதி வேலை நிறுத்தம் ஜாக்டோ ஜியோ அறிவிப்பு


மாவட்டத்தில் வருகிற 4–ந்தேதி வேலை நிறுத்தம் ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Sept 2018 4:15 AM IST (Updated: 30 Sept 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகைள வலியுறுத்தி மாவட்டத்தில் வருகிற 4–ந்தேதி திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

சிவகங்கை,

மாவட்டத்தில் வருகிற 4–ந்தேதி பல்வேறு கோரிக்கைகைள வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழரசன், இளங்கோ, முத்துப்பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும்.

ஆசிரியர்கள், அமைச்சு பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுனர்கள் ஆகியோர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும். பல்கலைக்கழக கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் அமுல்படுத்துதல் வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள், தொகுப்பூதியம், கணினி ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடன் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். இதை நிறைவேற்ற கோரி முதல் கட்டமாக வருகிற 4–ந்தேதி தற்செயல் விடுப்பு எடுத்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறோம்.

இந்த நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. மேலும் இந்த கோரிக்கைகளுக்கு எதிராக உத்தரவு வெளியிடுவது கண்டனத்துக்குரியது ஆகும். எனவே திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story