சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை


சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 Sept 2018 4:30 AM IST (Updated: 30 Sept 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

சேலம் தனியார் ஆஸ்பத்திரியில், விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெரியேரி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 49). விவசாயி. இவருக்கு சர்க்கரை நோய் இருந்தது. இதற்காக அவர், சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவ்வப்போது டயாலிசிஸ் செய்து கொள்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் ராஜேந்திரன், டயாலிசிஸ் செய்வதற்காக சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ராஜேந்திரனை அவரது மனைவி உடனிருந்து கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று காலை உணவு வாங்குவதற்காக அவரது மனைவி வெளியில் சென்றிருந்தார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது, அறையில் இருந்த ராஜேந்திரன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆஸ்பத்திரியில் நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆஸ்பத்திரி ஊழியர்களிடமும், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story