சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 50 சதவீத மானியத்தில் மின்சாரம் வழங்க வேண்டும்; சாய ஆலை உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 50 சதவீத மானியத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் என சாய ஆலை உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் 27–வது ஆண்டு மகாசபை கூட்டம் காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். துணைத்தலைவர் சீனிவாசன், இணைச்செயலாளர் தட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் காந்திராஜன் 2017–2018–ம் ஆண்டிற்கான வரவு–செலவு கணக்குகளை வாசித்தார். மேலும், இதில் பொதுச்செயலாளர் முருகசாமி, ஆடிட்டர் கந்தசாமி, தலைமை செயல் அலுவலர் பூபதி உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். முன்னதாக இணைச்செயலாளர் மாதேஸ்வரன் வரவேற்று பேசினார். முடிவில் துணைத்தலைவர் மகேஷ் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
* 2017–2018–ம் ஆண்டு சங்கத்தின் வரவு–செலவு கணக்குகளை பொதுக்குழு ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கிறது.
* தனியார் மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 50 சதவீத மானிய விலையில் மின்சாரம் வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது.
* பூஜ்யநிலை சுத்திகரிப்பு திட்டத்தை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த மத்திய அரசை கேட்டுக்கொள்வது.
* மத்திய அரசின் ஒருங்கிணைந்த சாயத்தொழில் மேம்பாட்டு திட்டத்தின் (ஐ.பி.டி.எஸ்.) கீழ் மரபு சாரா மின் உற்பத்தி திட்டத்தின் கீழ் காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம் தயாரித்து பொது சுத்திகரிப்பு நிலையங்களின் சுய தேவையை பூர்த்தி செய்ய மானியம் வழங்கவும், தேவைப்பட்டால் மாநில அரசே இதற்கான சிறப்பான திட்டத்தை செயல்படுத்தவும் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
* பூஜ்ய சுத்திகரிப்பு செய்யும் சாய ஆலைகளுக்கு மட்டும் உள்நாட்டு, வெளிநாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள் ஆர்டர் கொடுக்க வேண்டும் என கேட்பது.
* மத்திய, மாநில அரசுகள் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்கிய வட்டியில்லா கடனை மானியமாக மாற்ற ஆவன செய்யுமாறு வலியுறுத்துவது.
* பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க கேட்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.