மின்னல் தாக்கி பலியானவரின் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை


மின்னல் தாக்கி பலியானவரின் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 30 Sept 2018 4:30 AM IST (Updated: 30 Sept 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே மின்னல் தாக்கி பலியானவரின் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே எடச்சித்தூரை சேர்ந்தவர் ரேகா. இவர் நேற்று முன்தினம் விளைநிலத்தில் இருந்த போது, மின்னல் தாக்கி பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இந்த சம்பவம் குறித்து வருவாய்த்துறையினர் யாரும் நேரில் வந்து விசாரணை நடத்தவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ரேகாவின் உறவினர்கள் மற்றும் அந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நேற்று திடீரென எடச்சித்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மின்னல் தாக்கி பலியான ரேகாவின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி ஆறுதல் கூற வராத அதிகாரிகளை கண்டித்தும் கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

இது பற்றி தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ரேகாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்காவிட்டால் ரேகாவின் உடலை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு வைத்து போராட்டத்தை தொடருவோம் என்றனர்.

இதைத்தொடர்ந்து விருத்தாசலம் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ரேகாவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தனர். அதன்பேரில் உறவினர்கள், கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மின்னல் தாக்கி பலியானவரின் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தை உறவினர்கள், கிராம மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story