பொய்யாகுளம் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் - கலெக்டர் உத்தரவு
பொய்யாகுளத்தில் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என்று புதுவை மாவட்ட கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புதுச்சேரி,
புதுவை மாவட்ட கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி நேற்று சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொய்யாகுளத்தில் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கவர்னர் உத்தரவின் பேரில் புதுவை மாவட்ட கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி வாரந்தோறும் சனிக்கிழமை ஒவ்வொரு பகுதியாக சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு சென்றார். காமராஜர் சாலை, நேருவீதி, காந்திவீதி வழியாக சென்றார். அப்போது அந்த பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் முத்தியால்பேட்டை வழியாக பாக்குமுடையான்பேட் பகுதிக்கு சென்றார். அங்கு பழமை வாய்ந்த பொய்யாகுளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை பார்த்த கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி பொய்யாகுளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அந்த பகுதி மக்களை சந்தித்து பேசினார். அப்போது பொய்யாகுளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி அதனை மீட்டு புனரமைக்க வேண்டும் என்று கூறினார். அப்போது அந்த பகுதி மக்கள், அரசு தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி தந்தால் செல்வதற்கு தயார் என்று தெரிவித்தனர். அவர், இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
தொடர்ந்து கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி நகர பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை, நகராட்சி தனித்தனியாக மேற்கொள்வதை பார்வையிட்டார். பின்னர் இரு துறைகளும் இணைந்து செயல்படுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்த வாரம் உள்ளாட்சி துறை இயக்குனர் மலர்க்கண்ணன் தலைமையில் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.