பழங்குடியின மக்கள் போராட்டத்தை தொடர்ந்து பாடப்புத்தகத்தில் இருந்து சர்ச்சைக்குரிய கவிதை நீக்கம் மும்பை பல்கலைக்கழகம் அறிவிப்பு


பழங்குடியின மக்கள் போராட்டத்தை தொடர்ந்து பாடப்புத்தகத்தில் இருந்து சர்ச்சைக்குரிய கவிதை நீக்கம் மும்பை பல்கலைக்கழகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2018 5:15 AM IST (Updated: 1 Oct 2018 5:12 AM IST)
t-max-icont-min-icon

பழங்குடியின மக்கள் போராட்டத்தை தொடர்ந்து பாடப்புத்தகத்தில் இருந்த சர்ச்சைக்குரிய கவிதையை நீக்குவதாக மும்பை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தானே, 

பழங்குடியின மக்கள் போராட்டத்தை தொடர்ந்து பாடப்புத்தகத்தில் இருந்த சர்ச்சைக்குரிய கவிதையை நீக்குவதாக மும்பை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கவிதைக்கு எதிர்ப்பு

மும்பை பல்கலைக்கழகத்தின் பாடப்புத்தகத்தில் கவிஞர் தின்கர் மன்வார் எழுதிய ‘பானி காசா அஷ்தா’ என்ற மராத்திய கவிதை இடம்பெற்றுள்ளது.

இந்த கவிதையில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண்கள் குறித்து இழிவாக எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த கவிதையை புத்தகத்தில் இருந்து நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி தானே, பால்கர், ராய்காட் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள தாலுகா தலைமையகத்தை முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்தில் பெண்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்திற்கு, பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக உழைத்துவரும் சர்மஜிவி சங்காதனா அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் கூறியதாவது:-

தகுந்த நடவடிக்கை

பழங்குடியின சமுதாயத்திற்கு எதிரான அவமதிப்பை பொறுத்துக்கொள்ள முடியாது. கவிஞர் மற்றும் பல்கலைக்கழகம் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில், “இந்த தவறுக்கு காரணமான கவிஞர் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் பழங்குடியின பெண்களை தாக்கி கவிதை எழுதியவர் மீது எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

பிரச்சினை பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து மும்பை பல்கலைக்கழகம் சர்ச்சைக்குரிய கவிதை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
1 More update

Next Story