கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு தாசில்தார் பலி


கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு தாசில்தார் பலி
x
தினத்தந்தி 2 Oct 2018 4:15 AM IST (Updated: 1 Oct 2018 10:59 PM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த தாசில்தார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கோவை,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்தவர் அப்துல் ரகுமான் (வயது 47). இவர் கோத்தகிரியில் ஆதிதிராவிடர் நலத்துறையில் நிலம் எடுப்பு பிரிவு தாசில்தாராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ரகுமத் நிஷா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் அப்துல் ரகுமானுக்கு கடந்த 27–ந் தேதி கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.

இதற்காக அவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் காய்ச்சல் குறையவில்லை.

இதையடுத்து மேல்சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அப்துல் ரகுமானுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அப்துல் ரகுமான் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து அப்துல் ரகுமானின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

அப்துல் ரகுமானின் சொந்த ஊர் மேட்டுப்பாளையம் ஆகும். இவருடைய தந்தை சலாம். இவர் மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அப்துல் ரகுமானின் தம்பி சத்தார் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 1999–ம் ஆண்டு நடந்த கார்க்கில் போரில் சத்தார் இறந்தார். இவரின் இறப்பு காரணமாக தான் அப்துல் ரகுமானுக்கு அரசு பணி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story