குன்னூரில் குண்டும், குழியுமான சாலையில் வாழைக்கன்று நட்டு போராட்டம்


குன்னூரில் குண்டும், குழியுமான சாலையில் வாழைக்கன்று நட்டு போராட்டம்
x
தினத்தந்தி 2 Oct 2018 3:30 AM IST (Updated: 1 Oct 2018 11:09 PM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் குண்டும், குழியுமான சாலையில் வாழைக்கன்று நட்டு ஆட்டோ டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.

குன்னூர்,

குன்னூரில் ரெயில்வே கேட்டில் இருந்து பஸ் நிலைய ஆட்டோ நிறுத்த பகுதியையொட்டி சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக பஸ் நிலையம், மவுண்ட் ரோடு, எம்.ஆர்.சி. ராணுவ முகாம் மற்றும் கல்லூரி, சப்ளை டிப்போ ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. முக்கியமானதாக கருதப்படும் இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

இதற்கிடையே அந்த சாலையில் பெரிய பள்ளம் ஒன்று கிடக்கிறது. இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே அந்த பள்ளத்தை மூட வேண்டும், சாலையை சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறையினரிடம் பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி வாழைக்கன்று நட்டு ஆட்டோ டிரைவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். மேலும் பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் காகித கப்பல்களையும் விட்டனர். இனியாவது சம்பந்தப்பட்ட துறையினர் இந்த சாலையை சீரமைக்க முன்வர வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story