திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு செய்த மகனை அடித்துக்கொன்ற தந்தை


திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு செய்த மகனை அடித்துக்கொன்ற தந்தை
x
தினத்தந்தி 2 Oct 2018 3:00 AM IST (Updated: 2 Oct 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

வடக்கன்குளம் அருகே திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு செய்த மகனை சுத்தியலால் அடித்துக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

வடக்கன்குளம், 


நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ள பழவூர் சிதம்பராபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் கட்டிட காண்டிராக்டராக உள்ளார். அவருடைய மனைவி செல்வராணி. இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். அவர்களில் 3 பேருக்கு திருமணம் ஆகி விட்டது. கடைசி மகன் மணிகண்டன் (வயது 25). இவர் தனது தந்தையிடம் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும் அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மணிகண்டன் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தனது தாயார் செல்வராணியிடம் அடிக்கடி கூறி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவரும், திருமணம் செய்து வைப்பதாக கூறி வந்துள்ளார்.

நேற்று மாலையில் மணிகண்டன் வேலை முடிந்து தனது வீட்டுக்கு வந்தார். அங்கிருந்த தனது தாயாரிடம் மீண்டும் திருமண விஷயத்தை பேசினார். அப்போது இசக்கிமுத்துவும் வீட்டுக்கு வந்தார். மனைவி செல்வராணியிடம் வாக்குவாதம் செய்ததை பார்த்து, மகனை கண்டித்தார். இதனால் தந்தை-மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த இசக்கிமுத்து, அங்கு கிடந்த சுத்தியலால் மணிகண்டனின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் படுகாயம் அடைந்த மணிகண்டன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராணி, தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜ் தலைமையில் பழவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக பழவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முகம்மது சாம்ஜித், ரகு பாலாஜி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) டேவிட் ரவிராஜன் விசாரணை நடத்தி, இசக்கிமுத்துவை கைது செய்தார். பெற்ற மகனை, தந்தையே அடித்துக் கொலை செய்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story