வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும் - கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்

மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த ஆய்வாளர்கள் முயற்சிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்தார்.
புதுச்சேரி,
புதுவை பல்கலைக்கழகத்தின் இந்தி துறையானது டெல்லி தேசிய புத்தக ஆராய்ச்சி நிறுவனத்தோடு இணைந்து புத்தக வெளியீட்டு துறையில் சான்றிதழ் படிப்பை நடத்த உள்ளது. இதற்கான தொடக்கவிழா நடந்தது.
விழாவுக்கு புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் தலைமை தாங்கினார். இந்தி துறைத்தலைவர் ஜெய்சங்கர் பாபு வரவேற்று பேசினார்.
விழாவில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி சான்றிதழ் படிப்பை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–
மனித எண்ணங்களோடு உலகத்தையே இணைக்கும் ஆற்றல் புத்தகங்களுக்கு உண்டு. உலகத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழலில் புத்தகங்கள் மிக சுருக்கமாகவும், தரமாகவும், குறிப்பாக மக்கள் அனைவரும் படித்தவுடன் எளிதாக புரியும் நிலையிலும் இருக்கவேண்டும். அப்போதுதான் மக்களிடம் புத்தகங்களும், அவற்றிலுள்ள கருத்துகளும் சென்று சேரும்.
தற்போதைய நவீன தொழில்நுட்ப சூழலில் மின்னணு சார்ந்த தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வருகின்றது. அதனால் மின்னணு மூலம் புத்தகங்களை மிக அதிக அளவில் உருவாக்கும் முயற்சியில், பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் ஈடுபடவேண்டும். இணையதளம் போன்றவற்றை பயன்படுத்தி மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த ஆய்வாளர்கள் முயற்சிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






