திருவாரூர் மாவட்டத்தில் கன மழை; விவசாயிகள் மகிழ்ச்சி


திருவாரூர் மாவட்டத்தில் கன மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 3 Oct 2018 4:00 AM IST (Updated: 3 Oct 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று கன மழை பெய்ததால் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவாரூர்,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

திருவாரூர் மற்றும் புலிவலம், மாங்குடி, பவித்திரமாணிக்கம், காட்டூர், அடியக்கமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது

இதனால் பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டதால் முறை வைக்காமல் தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில் கன மழை பெய்ததால் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சம்பா சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கொரடாச்சேரி ஒன்றியம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் ஒன்றியத்தில் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை காணப்படுகிறது. தற்போது சம்பா நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்்த மழை விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் விவசாயிகள் உற்சாகத்துடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்றியத்தில் தற்போது நிலம் பண்படுத்துதல், நாற்று பறித்தல், நடவு நடுதல், களையெடுத்தல் என பலகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று காலை 10 மணிக்கு மேல் திடீரென்று பெய்த மழையால் விவசாயப்பணிகளுக்கு சென்றவர்கள் மழையில் நனைந்து கொண்டே விவசாய பணிகளை செய்தனர்.

பெருமழை பெய்தபோது சற்று ஒதுங்கி இருந்தவர்கள் சிறுமழை பெய்தபோது நனைந்து கொண்டே பணிகளை மேற்கொண்டனர். சிலர் முன்னெச்சரிக்கையாக பாலித்தீன் பேப்பர் கொண்டு வந்திருந்தனர். அதனை கொண்டு தலை மற்றும் முதுகு பகுதியில் தண்ணீர் படாதபடி அணிந்து கொண்டு சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.

தொடர்ந்து பல நாட்களுக்கு விவசாயப்பணிகள் இருப்பதால் தாமதம் இல்லாமல் சாகுபடி பணிகளை முடிக்க வேண்டும். மழைக்காக பணிகளை நிறுத்தினால் மீதமுள்ள நெல் நாற்றுகளும், நெல் வயல்களில் உள்ள களைச்செடிகளும் முற்றிவிடும். அதனால் மழைக்கு ஒதுங்காமல் வேலை செய்கிறோம் என விவசாய தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Next Story