கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தை காங்கிரசார் முற்றுகை


கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தை காங்கிரசார் முற்றுகை
x
தினத்தந்தி 4 Oct 2018 4:30 AM IST (Updated: 3 Oct 2018 8:13 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தை காங்கிரஸ் கட்சியினர் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் குடிநீர் கட்டணம், சொத்துவரி, தொழில் வரி ஆகியவற்றை தமிழக அரசும், பேரூராட்சியும் 100 சதவீதம் உயர்த்தியது.

இதனை கண்டித்து அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் மற்றும் கன்னியாகுமரி நகர காங்கிரஸ் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தது. ஆனால், இந்த முற்றுகை போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர்.

போராட்டத்திற்கு அனுமதி அளிக்காத போலீசாரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று கன்னியாகுமரி போலீஸ் நிலையம் முன்பு திடீரென திரண்டனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

இந்த முற்றுகை போராட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜஜெகன் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி நகர காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன், மாவட்ட மீனவ காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜோசப் மணி, மாவட்ட துணை தலைவர் சோரீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், மற்றொரு தேதியில் போராட்டத்தை நடத்த அனுமதிக்க கோரி போலீஸ் நிலையத்தில் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

Next Story