பெட்ரோல்–டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்


பெட்ரோல்–டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 4 Oct 2018 4:30 AM IST (Updated: 3 Oct 2018 8:30 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல்–டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி,

பெட்ரோல்–டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் மீனவர்கள் உள்பட அனைவரும் கடும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விலை உயர்வை கண்டித்தும், ராமேசுவரம் மீனவர்களை சிறைபிடித்து உடமைகளை பறிமுதல் செய்து விரட்டியடிக்கும் இலங்கை கடற்படையை கண்டித்தும் நேற்று கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சின்னமுட்டத்தை தங்குதளமாக கொண்டு 350–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். தினமும் மீன்பிடிக்க சென்று கரைக்கு திரும்பும் இந்த மீனவர்கள் போராட்டத்தில் குதித்ததால், விசைப்படகுகள் அனைத்தும் சின்னமுட்டம் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

வேலை நிறுத்தம் காரணமாக வெளியூர் வியாபாரிகள் வராததால் சின்னமுட்டம் துறைமுகம் மற்றும் மீன் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. போராட்டம் குறித்து கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரெஜீஸ் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், ராமேசுவரம் மீனவர்களை தொடர்ந்து தாக்கும் இலங்கை கடற்படையை கண்டித்தும், இதில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இதில் தீர்வு ஏற்படாவிட்டால் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

Next Story