பிரச்சினைக்குரிய பாதையை கோட்டாட்சியர் ஆய்வு விவசாயிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி


பிரச்சினைக்குரிய பாதையை கோட்டாட்சியர் ஆய்வு விவசாயிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி
x
தினத்தந்தி 4 Oct 2018 4:00 AM IST (Updated: 4 Oct 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

பிரச்சினைக்குரிய பாதையை கோட்டாட்சியர் ஆய்வு 2-ம் கட்டமாக விவசாயிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படும் சுண்ணாம்பு கற்களை லாரிகள் மூலம் கொண்டு செல்ல இலங்கை சேரி வழியாக பாதை அமைக்கும் பணியை சிமெண்டு ஆலை நிர்வாகம் மேற்கொண்டது. இதனை அப்பகுதி விவசாயிகள் தடுத்து நிறுத்தினார்கள். இதை தொடர்ந்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி தலைமையில், அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் இந்த பாதை விவசாயத்திற்காக வண்டி மாடுகளை ஓட்டி செல்லவும், நீர்வரத்து வழியாகவும் உள்ளது. ஆகையால் இந்த வழியே சுண்ணாம்புக்கல் லாரிகள் செல்ல அனுமதிக்க முடியாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து பிரச்சினைக்கு உரிய இடத்தை ஆய்வு செய்ய உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி மற்றும் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் தாஸ், செந்துறை தாசில்தார் உமா சங்கரி, செந்துறை ஆணையர் தமிழரசன் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது விவசாயிகள் பிரச்சினைக்குரிய இடத்தில் சரக்கு ஆட்டோவை நிறுத்தினால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாது. இந்த பாதையை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் கனரக வாகனங்கள் இயக்கமுடியாது என்று விளக்கி கூறினர். இதையடுத்து அதிகாரிகள் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து முடிவு செய்வதாக விவசாயிகளிடம் தெரிவித்து சென்றனர். இதனால் விவசாயிகளிடம் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. 

Next Story