உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார்: வேளாண் கல்லூரியில் இருந்து மாணவி அதிரடி நீக்கம்


உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார்: வேளாண் கல்லூரியில் இருந்து மாணவி அதிரடி நீக்கம்
x
தினத்தந்தி 4 Oct 2018 4:30 AM IST (Updated: 4 Oct 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி வேளாண் கல்லூரியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

வாணாபுரம்,

திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூரில் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சென்னை பகுதியை சேர்ந்த மாணவி படித்து வந்தார். அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் மீது புகார் கூறினார். இதற்கு 2 பெண் உதவி பேராசிரியைகளும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் கல்லூரியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 2 உதவி பெண் பேராசியைகளும் வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். பாலியல் புகார் கூறிய மாணவியும் திருச்சி வேளாண் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

திருச்சி கல்லூரிக்கு தன்னை மாற்றிய கோவை வேளாண் பல்கலைக்கழக ஆணையை அந்த மாணவி ஏற்கவில்லை. பாதிக்கப்பட்ட எனக்கு நியாயம் கிடைக்கும் வரை வாழவச்சனூர் கல்லூரியிலேயே தான் படிப்பேன் என்று திட்டவட்டமாக கூறினார். மாணவி திருச்சி கல்லூரிக்கு செல்ல கோவை வேளாண் பல்கலைக்கழகம் கடந்த 1-ந் தேதி வரை கெடு விதித்திருந்தது. இல்லை என்றால் கல்லூரியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை கடிதமும் அவருக்கு கடந்த 26-ந் தேதி அனுப்பப்பட்டிருந்தது.

வாழவச்சனூர் கல்லூரி நிர்வாகம் அந்த கடிதத்தை மாணவியிடம் கொடுக்க முயன்றனர். அதை அவர் பெறவில்லை. இதனால் அந்த கடிதம் கல்லூரி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. காலக்கெடு கடந்த 1-ந் தேதியோடு முடிந்ததால் கோவை வேளாண் பல்கலைக்கழகம் மாணவியை வாழவச்சனூர் கல்லூரியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான உத்தரவு கடிதம் வாழவச்சனூர் கல்லூரிக்கு வந்துள்ளது. இதனை மாணவியிடம் வழங்க கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் மாணவி நேற்று கல்லூரிக்கு வரவில்லை.

இதுகுறித்து மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது, என்னை கல்லூரியில் இருந்து நீக்கியதற்கான ஆணையை பார்த்தேன். எனக்கு நியாயம் கிடைப்பதற்காக நான் நீதிமன்றத்தை நாட உள்ளேன் என்றார்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, மாணவி கல்லூரிக்கு வராததால் அவரை நீக்கம் செய்து வந்த உத்தரவை நாங்கள் அறிவிப்பு பலகையில் ஒட்டி உள்ளோம். அவருக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.


Next Story