டெக்னிக்கல் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் நடத்த வேண்டும் - கோரிக்கை மனு


டெக்னிக்கல் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் நடத்த வேண்டும் - கோரிக்கை மனு
x
தினத்தந்தி 4 Oct 2018 4:15 AM IST (Updated: 4 Oct 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

டெக்னிக்கல் சப்-இன்ஸ்பெக்டர் பணிகாக நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் தேர்வு நடத்தவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கைமனு கொடுத்துள்ளனர்.

வேலூர்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 30-ந் தேதி டெக்னிக்கல் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 60 ஆயிரம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். வழக்கமாக இந்த தேர்வில் பொது அறிவுக்கான கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த 30-ந் தேதி நடந்த தேர்வில் ஆங்கிலத்தில் மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. இதனால் பிளஸ்-2 வரை தமிழ்வழி கல்வியில் படித்தவர்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

30-9-2018 அன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடந்த டெக்னிக்கல் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பொது அறிவு வினாக்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. தமிழில் மொழி பெயர்க்கப்படவில்லை. தமிழ்வழி பயின்ற மாணவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு இருக்கும் பட்சத்தில் பொது அறிவுக்கான 60 வினாக்கள் ஆங்கிலத்தில் இருந்தது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் பொது அறிவு வினாக்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டே இருக்கும். அதேபோன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2006-ம் ஆண்டு நடத்திய டெக்னிக்கல் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு, 2010, 2015 ஆகிய ஆண்டுகளில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வுகளில் பொது அறிவு வினாக்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த 30-ந் தேதி நடந்த தேர்வில் மட்டும் பொது அறிவு வினாக்கள் மொழி பெயர்க்கப்படாமல் இருந்தது. இது 12-ம் வகுப்புவரை தமிழ் வழியில் பயின்ற கிராமப்புறத்தை சேர்ந்தவர்களை ஏமாற்றும்விதமாக இருந்தது. தமிழ் வழியில் படித்த எங்களால், ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை.

எனவே 30.9.2018 அன்று நடந்த டெக்னிக்கல் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை ரத்து செய்துவிட்டு, தமிழ் மொழிபெயர்ப்புடன் மீண்டும் நடத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story