திருச்சியில் இடைவிடாமல் பெய்த மழை தொட்டியம் பகுதியில் மின்னல் தாக்கி 3 ஆடுகள் பலி


திருச்சியில் இடைவிடாமல் பெய்த மழை தொட்டியம் பகுதியில் மின்னல் தாக்கி 3 ஆடுகள் பலி
x
தினத்தந்தி 4 Oct 2018 4:15 AM IST (Updated: 4 Oct 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் இடைவிடாமல் மழை பெய்தது. தொட்டியம் பகுதியில் மின்னல் தாக்கி 3 ஆடுகள் செத்தன.

திருச்சி,

திருச்சியில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திருச்சியில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று காலையில் லேசாக வெயில் அடித்தது. அதன்பின் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டன. காலை 11.30 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரே சீராக மதியம் வரை பெய்தது. பின்னர் இடைவிடாமல் தூறிக்கொண்டே இருந்தது.

இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. சாலையில் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்த படி சென்றனர். குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. திடீர் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்ட பகுதியிலும் பல இடங்களில் மழை பெய்தது. இந்த மழை நள்ளிரவுக்கு மேலும் நீடித்தது.

தொட்டியம் பகுதியில் நேற்று மதியம் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் தொட்டியம் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி, தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை நேற்று தனது வீட்டின் பின்புறம் கட்டியிருந்தார். அப்போது மின்னல் தாக்கி 3 ஆடுகள் செத்தன. மேலும் தொட்டியம் அரசலூர் கைகாட்டி அருகே மின்னல் தாக்கியதில் தொட்டியம் பகுதிக்கு மின் வினியோகம் செய்யப்படும் மின்மாற்றி பழுதடைந்தது. இதனால் தொட்டியம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை தடைபட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- லால்குடி-2.60, மணப்பாறை-2.80, முசிறி-4.20, புள்ளம்பாடி-10.40, தா.பேட்டை-3, துறையூர்-4, திருச்சி விமானநிலையம்-4, டவுன்-5, நவலூர்குட்டப்பட்டு-1.80, நந்தியாறு அணை-7.20, கல்லக்குடி-30.20, வாத்தலை அணைக்கட்டு-11.40, சமயபுரம்-12, தேவிமங்கலம்-11.40, சிறுகுடி-6, குப்பம்பட்டி-12, கோவில்பட்டி-6.20, தென்பெறநாடு-5, பொன்மலை-3.80, திருச்சி ஜங்ஷன்-3.80, துவாக்குடி-6.80.

Next Story