மோட்டார் சைக்கிள் மீது லாரி கவிழ்ந்தது; உடல் நசுங்கி வாலிபர் பலி
நெல்லிக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் லாரியின் இடிபாட்டிற்குள் சிக்கி உடல்நசுங்கி பலியானார்.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்கிற அஜித்குமார்(வயது 22). இவர் நெல்லிக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் மிட்டாய் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை இவர் வழக்கம் போல் தொழிற்சாலைக்கு புறப்பட்டார். இதற்காக அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் இளம்பரிதி(23) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லிக்குப்பம் நோக்கி சென்றார். அப்போது வாழப்பட்டு அருகே சென்ற போது, இவர்களுக்கு முன்னால் சேலத்தில் இருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு நெல்லிக்குப்பம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இதை நெல்லிக்குப்பத்தை சேர்ந்த அப்துல்ஆசித் என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் எதிரே வந்த பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக லாரி டிரைவர் அப்துல் ஆசித் திடீரென பிரேக் பிடித்தார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடி, சாலையில் கவிழ்ந்தது. அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த கார்த்திகேயனின் மோட்டார் சைக்கிள் லாரியின் அடிப்பகுதியில் சிக்கி கொண்டது. இதில் லாரியின் இடிபாட்டிற்குள் சிக்கி உடல் நசுங்கிய கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் இளம் பரிதி மற்றும் லாரியில் வந்த புகழேந்தி, ஜீவா ஆகியோர் படுகாயடைந்தனர். இவர்களை அக்கம்பக்கக்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்துல் ஆசித் காயமின்றி உயிர்தப்பினார்.
விபத்து பற்றி அறிந்தவுடன் நெல்லிக்குப்பம் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அர மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி கவிழ்ந்ததில், அதில் இருந்த ஆயில் மற்றும் டீசல் வெளியேறி சாலையில் கொட்டியது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து நெல்லிக்குப்பம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாலையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர். பின்னர் விபத்துக்குள்ளான லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story