8 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஆலோசனை கூட்டம்


8 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2018 4:15 AM IST (Updated: 4 Oct 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ரிப்பன் மாளிகையில், 8 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

சென்னை,

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலின் சுருக்க முறை திருத்த பணிகள் சென்னை, மதுரை, திருச்சி, கோவை எனும் 4 மண்டல ரீதியாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த திருத்த பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஏற்கனவே திருச்சி மண்டல மாவட்டங்களுக்கு முடிந்துவிட்டது.

இந்தநிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்கள் உள்ளடங்கிய சென்னை மண்டலத்துக்கான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா அரங்கில் நேற்று காலை நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு தலைமை தாங்கினார். துணை தலைமை தேர்தல் அதிகாரி அனி ஜோசப், தேர்தல் கணினித்துறை மேலாளர் அசோக்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனரும், துணை தேர்தல் அதிகாரியுமான லலிதா, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பி.பொன்னையா (காஞ்சீபுரம்), மகேஸ்வரி ரவிக்குமார் (திருவள்ளூர்), எஸ்.ஏ.ராமன் (வேலூர்), கே.எஸ்.கந்தசாமி (திருவண்ணாமலை), டாக்டர் எஸ்.பிரபாகர் (கிருஷ்ணகிரி), எஸ்.மலர்விழி (தர்மபுரி), எல்.சுப்பிரமணியன் (விழுப்புரம்) மற்றும் மாநகராட்சி வருவாய் துணை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட சுருக்க திருத்த பணிகள் எப்படி நடைபெற்று வருகின்றன? எந்தளவில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன? மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் இருக்கின்றனவா? எந்திரங்களின் முதற்கட்ட சரிபார்ப்பு ஆய்வு பணி நிலவரம் என்ன? உள்ளிட்ட விவரங்கள் விவாதிக்கப்பட்டன.

மதுரை, கோவை மண்டலங்களுக்கான ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்தப்பட இருக்கிறது.

Next Story