பல்லாவரம் அருகே திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை; போலீசில் தந்தை புகார்


பல்லாவரம் அருகே திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை; போலீசில் தந்தை புகார்
x
தினத்தந்தி 4 Oct 2018 4:00 AM IST (Updated: 4 Oct 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் செய்து உள்ளார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகர் 5–வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கண்ணபிரான். உடற்பயிற்சியாளரான இவர், சொந்தமாக உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.

இவருடைய மனைவி பவித்ரா(வயது 27). பி.எல். படித்து முடித்துவிட்டு தனியார் செல்போன் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். கணவன்–மனைவி இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தனர்.

கண்ணபிரான், அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த பவித்ரா, வீட்டின் உள்அறையை பூட்டிக்கொண்டு துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்ணபிரான், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று, தூக்கில் தொங்கிய பவித்ராவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே பவித்ரா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த பவித்ராவின் தந்தை டில்லிபாபு, சங்கர் நகர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர், ‘‘என் மகளை, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். என் மகள் சாவில் சந்தேகம் உள்ளது. என் மகளின் சாவுக்கு காரணமான அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என கூறி இருந்தார்.

அதன்பேரில் சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பவித்ராவுக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் இதுபற்றி தாம்பரம் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.


Next Story