காவல்துறையினர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்; போலீஸ் டி.ஜி.பி.சுந்தரி நந்தா உத்தரவு
புதுச்சேரி காவல்துறையினர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.சுந்தரி நந்தா உத்தரவிட்டு உள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி காவல்துறை உதயதினம் கடந்த 1–ந் தேதி கொண்டாடப்பட்டது. அதையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி புதுவை கோரிமேட்டில் இருந்து கடற்கரை காந்தி சிலை வரை போக்குவரத்து போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினார்கள்.
ஊர்வலத்தை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பர்ன்வால் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் ராஜீவ் காந்தி சதுக்கம், இந்திரா காந்தி சதுக்கம், திருவள்ளுவர் சாலை, 45 அடி ரோடு, அஜந்தா சிக்னல் வழியாக கடற்கரை காந்தி சிலையை வந்தடைந்தது.
அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா பேசியதாவது:–
ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பது சட்டம். புதுவை காவல்துறையினர் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும். தங்களின் குடும்ப உறுப்பினர்களையும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டிச்செல்லும்படி வலியுறுத்த வேண்டும். ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.