கவர்னர் கிரண்பெடி மீது உரிமை மீறல் புகார்; சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் அன்பழகன் எம்.எல்.ஏ. கொடுத்தார்
கவர்னர் கிரண்பெடி மீது உரிமை மீறல் புகாரை சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் அன்பழகன் எம்.எல்.ஏ. கொடுத்தார்.
புதுச்சேரி,
புதுவை அரசின் உள்ளாட்சித்துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கம்பன் கலையரங்கில் நடந்த விழாவில், திறந்தவெளி கழிப்பிடமில்லாத மாநிலமாக புதுச்சேரி அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் கவர்னர் கிரண்பெடி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், ராதாகிருஷ்ணன் எம்.பி., அன்பழகன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்
விழாவின்போது பேசுவதற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பேசியதால் அன்பழகன் எம்.எல்.ஏ.வை பேச்சை முடித்துக்கொள்ளுமாறு கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தலின்பேரில் அதிகாரிகள் 2 முறை துண்டு சீட்டு வழங்கினார்கள். ஆனால் அதை பொருட்படுத்தாமல் அன்பழகன் எம்.எல்.ஏ. தொடர்ந்து பேசினார்.
இதைத்தொடர்ந்து இருக்கையைவிட்டு எழுந்த கவர்னர் கிரண்பெடி, அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் பேச்சை முடிக்குமாறு வலியுறுத்தினார். அதன்பிறகும் தொடர்ந்து அவர் பேசியதால் ஆத்திரமடைந்து மைக் இணைப்பினை துண்டிக்க கவர்னர் உத்தரவிட்டார்.
இதையொட்டி கவர்னர் கிரண்பெடிக்கும், அன்பழகன் எம்.எல்.ஏ.வுக்கும் மேடையிலேயே வாக்குவாதம் நடந்தது. இருவரும் ஒருவரையொருவர் வெளியே போகுமாறு சண்டையிட்டு கொண்டனர். இந்தநிலையில் அன்பழகன் எம்.எல்.ஏ. விழா அரங்கில் இருந்து வெளியேறினார்.
இதுகுறித்து சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் நேற்று முன்தினம் நடந்த சம்பவங்களை குறிப்பிட்டு, தனது உரிமையை பறிக்கும் விதத்தில் செயல்பட்ட கவர்னர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அசனா, வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.