ஓடைகளில் மணல் அள்ளுவது தடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


ஓடைகளில் மணல் அள்ளுவது தடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 4 Oct 2018 6:03 AM IST (Updated: 4 Oct 2018 6:03 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பகுதியில் உள்ள ஓடைகளில் நள்ளிரவு நேரங்களில் மணல் அள்ளுவதை தடுக்கவேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கம்பம், 

கம்பம் மேற்கு பகுதியான ஏகலூத்து ரோடு, கம்பம்மெட்டு ரோடு, புதுக்குளம் ரோடு, மணிகட்டி ஆலமரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஓடைகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைக் காலங்களில் நீர்வரத்து ஏற்பட்டால் ஓடைகள் வழியாக குளங்கள், சின்னவாய்க்காலுக்கு தண்ணீர் செல்லும் வகையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கம்பம் பள்ளதாக்கு பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்து வருகின்றன. இதேபோல் கம்பம் மேற்கு பகுதியில் உள்ள மலையடிவார பகுதிகளிலும் மழை பெய்தன. இதனால் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக ஓடைகளில் மணல் குவிந்து காணப்படுகிறது.

இந்த பகுதியில் உள்ள ஓடைகளில் நள்ளிரவு நேரத்தில் சிலர் அனுமதியின்றி மணலை அள்ளி செல்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக கம்பம்-ஏகலூத்து சாலை ஆலமரத்துக்குளம் பகுதியில் உள்ள ஓடையில் மணலை அள்ளி டிராக்டர்கள், லாரிகளில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். ஓடைகளில் இருந்து தொடர்ந்து மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிடும் அபாயம் உள்ளது.

எனவே கம்பம் பகுதியில் ஓடைகளில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும். மேலும் அனுமதியின்றி மணல் அள்ளுபவர்கள் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

Next Story