சொரக்காய்பேட்டை அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து10 பேர் காயம்; டிரைவர் கைது


சொரக்காய்பேட்டை அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து10 பேர் காயம்; டிரைவர் கைது
x
தினத்தந்தி 4 Oct 2018 10:45 PM GMT (Updated: 4 Oct 2018 6:29 PM GMT)

சொரக்காய்பேட்டை அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததில் 10 பேர் காயம் அடைந்தனர். ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா சொரக்காய்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது காரிய நிகழ்ச்சி சொரக்காய்பேட்டை கிராமத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக ஆந்திர மாநிலம் நகரி அருகே ஏகாம்பர குப்பம் கிராமத்தை சேர்ந்த அவரது உறவினர்கள் 12 பேர் ஷேர் ஆட்டோவில் புறப்பட்டனர். ஆட்டோவை கரகண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 36) என்பவர் ஓட்டினார்.

சொரக்காய்பேட்டை அருகே ஒரு சாலை வளைவில் திரும்பியபோது ஷேர் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. ஆட்டோவில் இருந்தவர்கள் அலறினர். சத்தம் கேட்டு அருகில் வயலில் வேலை செய்து கொண்டு இருந்த சிலர் ஓடி வந்து ஆட்டோவில் சிக்கியவர்களை மீட்டனர்.

இதில் ஆட்டோவில் பயணம் செய்த ஏகாம்பரகுப்பம் கிராமத்தை சேர்ந்த யசோதா (47), உமாமகேஸ்வரி (50), சின்ன பொண்ணு (51), ரங்கநாதன் (67) எல்லம்மாள் (49), அமுதா (45), விமலா (52), சுசீலா (54), நீலம்மாள் (54) தனலட்சுமி (53) ஆகியோர் காயம் அடைந்தனர்.

இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சொரக்காய்பேட்டை ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதில் யசோதா, சின்னபொண்ணு, உமாமகேஸ்வரி, ரங்கநாதன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து பொதட்டூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story