கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்


கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 5 Oct 2018 4:15 AM IST (Updated: 5 Oct 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தற்செயல்விடுப்பு எடுத்து, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கொட்டும் மழையிலும் குடைபிடித்தப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவக்குமார், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் சித்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக கல்வி மாவட்ட செயலாளர் புஷ்பராஜ், ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் அந்துவன்சேரல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜம்ருத் நிஷா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு முறையான ஊதிய விகிதம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும். 5 ஆயிரம் அரசுப்பள்ளிகளை மூடும் செயலை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக நாகை தாசில்தார் அலுவலகம் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் புகழேந்தி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட இணை செயலாளர் சத்தியசீலன், தமிழக ஆரம்பப்பள்ளி மாநில துணை பொதுச்செயலாளர் அருள்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி தேவதாஸ் நன்றி கூறினார். ஜாக்டோ- ஜியோ தற்செயல்விடுப்பு போராட்டத்தின் காரணமாக கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெரும்பாலான அலுவலர்கள் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story