பட்டாசு கழிவுகளை ஆலைக்கு உள்ளேயே எரிக்க வேண்டும் ; அதிகாரி அறிவுறுத்தல்


பட்டாசு கழிவுகளை ஆலைக்கு உள்ளேயே எரிக்க வேண்டும் ; அதிகாரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 5 Oct 2018 3:30 AM IST (Updated: 5 Oct 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசு தயாரிக்கும் போது ஏற்படும் கழிவுகளை ஆலையில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் எரிக்க வேண்டும் என்று வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி வலியுறுத்தினார்.

சிவகாசி, 

சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் மத்தாப்பூ குச்சி தயாரிப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் துணை தலைமை அதிகாரி சுந்தரேசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் பல்வேறு பகுதியில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டாலும், மத்தாப்பூ குச்சிகள் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் தான் தயாரிக்கப்படுகிறது. இங்கு இருந்து தான் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் மத்தாப்பூ குச்சிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. மற்ற பட்டாசு வகைகளுடன் மத்தாப்பூ குச்சிகளை அனுப்பக் கூடாது என்பது விதி. ஆனால் பட்டாசு பண்டல்கள் கொண்டு செல்லும் லாரிகளில் சிறிது அளவு இடம் இருந்தாலும் அதில் மத்தாப்பூ குச்சிகளை அனுப்பி வைக்கும் முறை இருப்பதாக கூறப்படுகிறது. இது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்தாப்பூ குச்சிகளை தயாரிக்கும் பட்டாசு ஆலைகளில் 2 போர்மென்கள் இருக்க வேண்டும். ஆலையில் உற்பத்தி நேரத்தில் கண்டிப்பாக போர்மென்கள் இருக்க வேண்டும். ஆலையில் போர்மென்கள் இல்லை என்றால் உற்பத்தி இருக்கக் கூடாது என்பது விதி. இதை உற்பத்தியாளர்கள் சரியாக பின்பற்ற வேண்டும். ஒரு மத்தாப்பூ குச்சியில் ஒரு வண்ணம் மட்டுமே இருக்க வேண்டும். பல வண்ணங்களில் குச்சிகள் எரிவது போல் தயாரிக்கக் கூடாது. மருந்து கலவைகள் எப்போதும் ஈரத் தன்மையுடன் தான் இருக்க வேண்டும்.

எளிதில் தீப்பிடிக்கும் மத்தாப்பூ குச்சிகளை வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கும்போது அந்த அட்டை பெட்டியின் வெளியே “கவனமாக கையாளவும்“ என்ற எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பி வைக்கலாம். இது விபத்துக்களை தவிர்க்க பயன்படும். ஒவ்வொரு பண்டல்களும் 10 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆலைகளில் உற்பத்தியின்போது வெளிப்படும் கழிவுகளை ஆலையில் அதற்கென உள்ள இடத்தில்தான் கொட்டி எரிக்க வேண்டும். அதை தவிர்த்து ஆலையின் வெளியே கொண்டு வந்து எரிப்பதை முற்றிலும் கைவிட வேண்டும். நமது தேவைக்காக விதிகளை மாற்றவோ, மீறவோ கூடாது.

இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் வெடிபொருட்கள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சரவணன் மற்றும் ஏராளமான மத்தாப்பூ குச்சி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். 

Next Story