கரூரில் மாதிரி வாக்குப்பதிவு வருவாய் அதிகாரி பார்வையிட்டார்


கரூரில் மாதிரி வாக்குப்பதிவு வருவாய் அதிகாரி பார்வையிட்டார்
x
தினத்தந்தி 5 Oct 2018 4:15 AM IST (Updated: 5 Oct 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் மாதிரி வாக்குப் பதிவு பணி நடைபெற்றது. இதனை மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் பார்வையிட்டார்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாதிரி வாக்குப்பதிவு பணி நேற்று நடைபெற்றது. இப்பணியை மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் பார்வையிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

எதிர்வரும் மக்களவை பொதுத்தேர்தல், 2019 பணிகளுக்காக பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு கரூர் மாவட்டத்திற்கு 1,390 வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளும், 2,560 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரங்களும் வரப்பெற்றுள்ளது. இந்த எந்திரங்கள் கரூர் மாவட்ட கலெக்டர் அலு வலக பாதுகாப்பு அறை மற்றும் கரூர் வட்டாட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்திலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேற்படி புதிதாக வரப்பெற்ற வாக்குப்பதிவு எந்திரங்களை பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்களை கொண்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல் நிலை தணிக்கை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக இன்று (அதாவது நேற்று) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு செய்யும் பணிகள் நடைபெற்றது. அரசியல் கட்சி பிரதிநிதிகளும் மாதிரி வாக்குப்பதிவில் கலந்து கொண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவு செய்து வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரத்தில் பதிவான வாக்கினையும் சரிபார்த்தனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, முதல் நிலை தணிக்கை பணிகளின் பொறுப்பு அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருமான குமரேசன் மற்றும் தேர்தல் வட்டாட்சியர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story