ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம்


ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2018 10:15 PM GMT (Updated: 4 Oct 2018 8:57 PM GMT)

ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இதனால் அரசு அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

வேலூர்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை வழங்கவேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதிய முறை ஆகியவற்றை ரத்து செய்து அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. வேலைநிறுத்தத்தை முன்னிட்டு வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேற்று காலை முதல் மழை பெய்தது. இதனால் கொட்டும் மழையிலும் அங்குள்ள பாலத்திற்கு அடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ- ஜியோ மாவட்ட அமைப்பாளர்கள் சரவணராஜ், அமர்நாத், தாண்டவராயன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை குறைவாக இருந்தது. 70 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை என்று ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 20 சதவீதம் ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோன்று அரசு ஊழியர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டதால் அலுவலர்கள், பணியாளர்கள் இன்றி பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story