குமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே வேண்டுகோள்


குமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 Oct 2018 4:00 AM IST (Updated: 5 Oct 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாகர்கோவில்,

வானிலை மைய தகவலின்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென் கிழக்கு அரபிக்கடலில் 5-10-2018 (அதாவது இன்று) உருவாகும் எனவும், அடுத்த இரண்டு நாட்களில் (அதாவது 6-10-2018 மற்றும் 7-10-2018 ) காற்றழுத்தமாக மாறி வடமேற்கு திசைநோக்கி நகரும் எனவும் அறியப்படுகிறது. எனவே குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்றுள்ள படகுகளும் 5-10-2018-க்குள்(இன்று) கரை திரும்புமாறும் ஏற்கனவே கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வானிலை மைய தகவல்களை மீனவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க, மீன்துறை அலுவலர்கள், தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் எச்சரிக்கை அறிவிப்புகள் உடனுக்குடன் மொழி பெயர்ப்பு செய்து குறுந்தகவல்களாக மீனவர்கள் அனைவரும் அறிய அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, தூத்தூர் பகுதிகளில் ஆழ்கடல் விசைப்படகு உரிமையாளர்கள் அதிகம் உள்ளனர். குறிப்பாக பூத்துறை, தூத்தூர், இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி மீனவ கிராமங்களில் ஊர் வாரியாக தனித்தனியாக வாட்ஸ்- அப் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் உடனுக்குடன் தகவல்கள் அளிக்கப்படுகிறது. மேலும் தூத்தூர் பகுதியில் சின்னத்துறை- 8300022238 மற்றும் வள்ளவிளை - 9489210152 பகுதிகளில் கட்டுப்பாட்டு அறைகள் இயங்கி வருகின்றன.

மேலும் கடலோர காவல்படையின் சென்னை, மும்பை, கொச்சின் நிலையங்கள் மூலமும், இந்திய கப்பற்படை மூலமும் ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு கப்பல் மூலம் தகவல் தெரிவித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதின் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளை கண்காணிக்க 9 மண்டல அளவிலான அனைத்துத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு அக்குழுக்கள் தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்துள்ளனர்.

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும், நாகர்கோவில் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

வானிலை எச்சரிக்கை மைய தகவல்களை உடனுக்குடன் அறிவிக்கவும், மேலும் இதுகுறித்து தகவல்களைப் பெறவும் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04652-231077. மீன்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04652-227460 ஆகியவற்றில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கனமழை பெய்யும் பட்சத்தில் பாதுகாப்பாக இருக்குமாறும், கனமழை தொடர்பாக தேவையில்லாமல் வெளிவரும் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார். 

Next Story