தர்மபுரி மாவட்டத்தில் பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தர்மபுரி மாவட்டத்தில் பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2018 4:15 AM IST (Updated: 5 Oct 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் கே.பி.அன்பழகனை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொம்மிடி,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யை விமர்சித்து பேசியதாக கூறி அமைச்சர் கே.பி.அன்பழகனை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று பொம்மிடி ரெயில் நிலையம் முன்பு பா.ம.க. சார்பில் அமைச்சர் கே.பி.அன்பழகனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தொகுதி அமைப்பு செயலாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். மாநில துணை அமைப்பு செயலாளர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் தம்பிதுரை, ஸ்ரீதர், மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், முருகேசன், பழனிசாமி, சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பென்னாகரம் ஒன்றிய அமைப்பு செயலாளர் சுதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவன், நிர்வாகிகள் மணி, சிவன், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பா.ம.க.வினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

நல்லம்பள்ளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், ராஜீவ்காந்தி, அன்புகார்த்தி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கருப்பு கொடி ஏந்தி, அமைச்சர் மற்றும் போலீசாரை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் முத்துவேல், முருகன், ரவி, காவேரி, மாதவராஜ், ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது அமைச்சர் அன்பழகனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் இதில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரியில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் இருந்து வன்னியர் சங்க மாநில செயலாளர் அரசாங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கருப்பு கொடியுடன் ஊர்வலமாக சென்று 4 ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் நம்பிராஜன், வணங்காமுடி, மாவட்ட தலைவர் மதியழகன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜன், உழவர் பேரியக்க மாநில துணைத்தலைவர் சின்னசாமி, முன்னாள் நகர செயலாளர் சுப்பிரமணியன், நகர செயலாளர் செல்வராஜ், நகர தலைவர் முருகவேல் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். அங்கு வந்த போலீசார், அனுமதியில்லாமல் மறியலில் ஈடுபட்டதாக 6 பெண்கள் உள்பட 42 பேரை கைது செய்தனர்.

Next Story