பெட்ரோல், டீசல் விலை மேலும் 25 சதவீதம் குறையும் பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி


பெட்ரோல், டீசல் விலை மேலும் 25 சதவீதம் குறையும் பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி
x
தினத்தந்தி 5 Oct 2018 4:30 AM IST (Updated: 5 Oct 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் பெட்ரோல், டீசல் விலை மேலும் 25 சதவீதம் குறையும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் மஹாசக்தி கேந்திரம், சக்தி கேந்திரம் மற்றும் பா.ஜனதா பூத் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சி எதையும் மத்திய அரசு செய்யவில்லை என்பது சரியான வாதம் அல்ல. மத்திய அரசு விலையை கட்டுப்படுத்த இயலாத நிலையில் உள்ளது. டாலர் மதிப்பு உயர்வும், கச்சா எண்ணெய் விலை அதிகம் ஆவதும் தான் விலை ஏற்றத்துக்கு காரணம். உலகத்தின் பல்வேறு நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டுமானால் ஜி.எஸ்.டி.க்குள் இதனை சேர்க்க வேண்டும். அதற்காக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் எல்லா மாநிலத்தோடும் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார். அது வெற்றிகரமாக முடிந்தால் பெட்ரோல், டீசல் விலை மேலும் 25 சதவீதம் குறையும்.

ரபேல் விமானம் ஒரு போர் விமானம். காங்கிரஸ் அரசு 126 விமானங்களை வாங்க இருந்தது. ஆனால் ஏன் வாங்கவில்லை. ஒரு நாடு இன்னொரு நாட்டிடம் வாங்கும் போது லஞ்சம் கொடுக்காது. மாறாக ஒரு நிறுவனத்திடம் வாங்கும்போதுதான் லஞ்சம் பெறும் வாய்ப்புள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விமானம் வாங்க முடிவு செய்திருந்த போது என்ன விலை நிர்ணயம் செய்யப்பட்டதோ அந்த விலையில் இருந்து 9 சதவீதம் விலை குறைவாக தான் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளது. விமானத்தை சர்வீஸ் செய்ய நாங்கள் கம்பெனியை தேர்ந்தெடுக்கவில்லை. விமானம் விற்ற நாடே அந்த கம்பெனியை பரிந்துரை செய்துள்ளது. இவையெல்லாம் ராகுல்காந்தியின் கற்பனைக் குற்றச்சாட்டு.

நடிகர் விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். கட்சியை தேர்தல் ஆணையம் பதிவு செய்தாலும், மக்கள் இடத்தில் அங்கீகாரம் பெற வேண்டும். தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவினால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. காரணம் மறைந்தவர்கள் இருவருமே ஆளுமை சக்தி படைத்தவர்கள். அதன் காரணமாக நாமும் வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள். எல்லோரும் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிவிட முடியாது.

அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் வருவது குறித்து மாநில அரசு மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால் எதுவாக இருந்தாலும் இவை துரதிர்ஷ்டமான முடிவு. நாடு முழுவதும் இருந்து சபரிமலைக்கு வருகிறார்கள். நீதிமன்றத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு மக்கள் முடிவு எடுப்பார்கள் என்று நினைக்கவில்லை. தெய்வத்தின் மீது அச்சப்பட்டு, தெய்வத்திற்கு கட்டுப்பட்டுதான் மக்கள் வாழ்வார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்பினால் மட்டும் சமுதாயத்தில் மாற்றம் வரும் என்று நான் நம்பவில்லை. இதை எதிர்த்து லட்சக்கணக்கான பெண்கள் ஊர்வலமாக சென்றார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடந்த கூட்டத்திற்கு பா.ஜனதா நகர தலைவர் வேணுசெல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முனிராஜ், கோட்டப்பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் சிவபிரகாஷ், கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சின்னசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ஹரிகோட்டீஸ்வரன், அகில இந்திய வக்பு வாரிய தலைவர் முனவரிபேகம், நகர பொறுப்பாளர்கள் தமிழ்செல்வன், தினேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story