குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள், கலெக்டரிடம் மனு


குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 5 Oct 2018 4:15 AM IST (Updated: 5 Oct 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் குடியிருப்பு பகுதியில் புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுமக்கள், மதுக்கடைக்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தி கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் விநாயகர் கோவில் தெரு மற்றும் பதிநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள விநாயகர் கோவில் தெருவில் இருந்து பதிநகர் செல்லும் சாலையில் சேலம் மெயின் ரோட்டிற்கு செல்லும் குறுக்கு சந்து பகுதியில் புதிதாக மதுக்கடை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக அறிகிறோம்.

இந்த பகுதி அதிக அளவில் குடியிருப்பு மற்றும் சரக்கு வாகனங்கள் பழுதுநீக்கும் பணிமனைகள் உள்ள பகுதியாகும். மேலும் இந்த பகுதியில் தனியார் பள்ளி ஒன்றும், பதிநகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியும் அமைந்து உள்ளன. எனவே இங்கு புதிதாக மதுக்கடை அமைத்தால் அது பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு இடையூறாக அமையும்.

மேலும் இந்த பகுதியில் லாரி பட்டறைகள் அதிக அளவில் உள்ளதால், வெளியூர்களில் இருந்து வரும் முகம் தெரியாத வாகன ஓட்டுனர்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். எனவே இந்த பகுதியில் மதுக்கடை அமைத்தால், அவர்களால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், இப்பகுதி பெண்களுக்கும், இதர பொதுமக்களுக்கும் மிகுந்த இடையூறு ஏற்படும்.

மதுக்கடை அமைக்க உத்தேசித்துள்ள இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் சேலம் சாலையில் 2 மதுக்கடைகள் ஏற்கனவே உள்ளன. மேலும் ஒரு மதுக்கடை குடியிருப்பு பகுதியில் அமைத்தால் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையூறாக இருக்கும்.

எனவே அமைதியான எங்கள் குடியிருப்பு பகுதியில் புதிதாக மதுக்கடை அமைக்க அனுமதி அளிக்க வேண்டாம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர். 

Next Story