பட்டதாரியிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13½ லட்சம் மோசடி செய்த முதியவர் கைது
வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரியிடம் ரூ.13½ லட்சம் மோசடி செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர். மும்பையை சேர்ந்த அவர் 6 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கி உள்ளார்.
சேலம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 32). பட்டதாரி. இவர் கடந்த 2012-ம் ஆண்டு வேலை தேடி கொண்டிருந்தார். அப்போது முகநூல் மூலம் மும்பையை சேர்ந்த மகேந்திரபால்ரமன்லால்ஷா (67) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர், பணம் கொடுத்தால் பெரிய நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக முத்துசாமியிடம் கூறி உள்ளார். இதை நம்பிய அவர் ரூ.13½ லட்சம் கொடுத்து உள்ளார். பணம் பெற்றுக்கொண்டு அவர் வேலை வாங்கி தரவில்லை. பின்னர் அவரை தொடர்பு கொண்ட போது அவர் தலைமறை வாகியது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 2012-ம் ஆண்டு சேலம் சைபர் கிரைம் போலீசில் முத்துசாமி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார், மும்பை சென்றனர்.
பின்னர் மும்பை போலீசாருடன் இணைந்து அங்கு உள்ள ஒரு கோவிலில் பணியாற்றி வந்த மகேந்திரபால்ரமன்லால்ஷாவை கைது செய்தனர். 6 ஆண்டுகளுக்கு பிறகு கைதான அவரை சேலம் அழைத்து வந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story