கோவை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்


கோவை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2018 3:34 AM IST (Updated: 5 Oct 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அரசு அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடின.

கோவை,

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதியக்குழு பரிந்துரை செய்த 21 மாத நிலுவை தொகையை வழங்குவதுடன் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், தொகுப்பூதியம் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர்(ஜாக்டோ-ஜியோ) கோவை மாவட்டத்தில் நேற்று ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு பணியாளர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டம் காரணமாக ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

கோவை அரசு கலைக்கல்லூரியில் 249 பேராசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 243 பேராசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் 33 சிறப்பு பேராசிரியர்கள் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இதே போல அரசு பள்ளி ஆசிரியர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதால் குறைந்த ஆசிரியர்களே பணிக்கு வந்தனர். சிறப்பு ஆசிரியர்களை நியமித்து வகுப்புகளை நடத்த கல்வி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மாணவிகள் பாடம் நடத்தினர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் நிர்வாக பிரிவு ஊழியர்கள் பணிக்கு வந்தனர். இதனால் அந்த பிரிவு வழக்கம் போல இயங்கியது.

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளிலும் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டன. விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்துகொண்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் குமார், பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டம் குறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குமார் கூறியதாவது:- வருகிற 13-ந்தேதி சேலத்தில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற உள்ளது. கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் 27-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்துவோம். நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஊதியக்குழு நிலுவை தொகையை ரொக்கமாக பெற்றுள்ளனர். 2003-க்கு பின்னர் வந்த எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு பழைய பென்சன் திட்டம், 2003-க்கு பின்னர் சேர்ந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய பென்சன் திட்டம். இது சரிதானா? என்பதை அரசு உணர வேண்டும். விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தும் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தாலும் கவலைப்பட மாட்டோம். எங்களது கழுத்தை அறுத்தாலும் அச்சப்பட மாட்டோம். கோவை மாவட்டத்தில் இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story