தச்சு தொழிலாளியை கொலை செய்ய முயன்ற வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை


தச்சு தொழிலாளியை கொலை செய்ய முயன்ற வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 4 Oct 2018 10:39 PM GMT (Updated: 2018-10-05T04:09:35+05:30)

தச்சு தொழிலாளியை கொலை செய்ய முயன்ற வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கடலூர், 

குறிஞ்சிப்பாடி அருகே பெரிய கண்ணாடியை சேர்ந்தவர் வீரப்பன். இவருடைய மகன் திருநாவுக்கரசு (வயது 38). தச்சு தொழிலாளி. இவர் கடந்த 29.2.2016 அன்று ஊரில் உள்ள குட்டான்குளத்தில் மீன் விடுவதற்காக ரூ.90 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.

இதை அறிந்த அதே ஊர் காமன்கோவில் தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் கண்ணதாசன் (35) என்பவர் திருநாவுக்கரசிடம் நீ எப்படி குளத்தில் மீன்பிடிக்கிறாய் பார்ப்போம் என்று கூறி தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கண்ணதாசன், திருநாவுக்கரசை ஆபாசமாக பேசி இரும்பு குழாயால் தாக்கி கொலை செய்ய முயன்றார். இந்த தாக்குதலில் காயமடைந்த திருநாவுக்கரசு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இது பற்றி திருநாவுக்கரசு குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணதாசனை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் 2-வது கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி பிரபாவதி தீர்ப்பு கூறினார்.

அதில், இந்த வழக்கில் கண்ணதாசன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சண்முகம் ஆஜராகி வாதாடினார். 

Next Story